மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர சரியவில்லை: பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம்
In இலங்கை March 15, 2018 11:55 am GMT 0 Comments 1363 by : Yuganthini

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் இன்னும் அதிகளவான நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களின் ஆதரவு சரிந்து விட்டதென கூறப்படுவது மாயையே என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகின்றோம்.
இதன் அடிப்படையில் திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை,முல்லைத்தீவு,வவுனியா ஆகிய மாவட்டங்களிலே நாங்கள் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை அறிந்திருக்கின்றோம்.
இந்நிலையில் இன்று மன்னார் மாவட்டத்திற்கு மக்களை சந்திக்க வந்தோம். காலை முதல் அதிகமான மக்கள் இங்கு வந்து தமது கருத்துக்களை கூறிச் சென்றுள்ளனர்.
மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் எமது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து மக்களின் கருத்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தி, பல்வேறு செயல் திட்டத்தை அமுல்படுத்தி, எமது கட்சியை பலமான கட்சியாக எதிர் காலத்தில் செயல் படுத்துவதற்கு ஏற்ற வழி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்போடு இன்னும் அதிக அளவு ஒரு மித்தவர்களாக இருப்பதை இந்தச் சந்திப்பின் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சரிவு ஏற்பட்டமைக்கு காரணம் குறித்த தேர்தலில் பலர் மாறாகவே வாக்குகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைப்போம் என, மக்கள் தெரிவித்துள்ளனர் என, அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.