மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படுவதாக கூட்டமைப்பு கூறுவது தவறு – ஜோன்ஸ்டன்
In இலங்கை February 7, 2021 9:17 am GMT 0 Comments 1474 by : Dhackshala

மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் பொதுத்தேர்தலை நடத்தியதை போன்று பாதுகாப்பான முறையில் மாகாண சபை தேர்தலையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் எனவும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “மார்ச் மாதம் மாகாண சபை தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த அமைச்சரவை மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்பாராத வகையில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று தீவிரமடைந்த காரணத்தினால் தேர்தலை தற்காலிகமாக பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதை காட்டிலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமானதொன்றாக கருதப்பட்டது .
மேலும் தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அப்போதைய அரசாங்கம் அடைந்த தோல்வி மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சி பதவியில் இருந்துக் கொண்டு முழு ஆதரவையும் வழங்கினார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்ட செயற்திட்டங்கள் தாமதிக்கப்பட்டுள்ளன. தற்போது முன்னெடுக்கபபடும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அனைத்து தரப்பினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.