மக்களுக்கு சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை
In இலங்கை February 17, 2021 3:27 am GMT 0 Comments 1228 by : Yuganthini
சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “கொவிட் வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.
இதேவேளை கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையை சுகாதாரத் துறை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. உண்மையாக இந்த வைரஸ் தொற்றினை சுகாதாரத் துறையோ அல்லது ஆயுதப்படைகளினாலோ கட்டுப்படுத்த முடியாது.
மேலும் சுகாதாரத் துறையில், 22 மில்லியன் மக்களைப் பராமரிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. ஆகவே பொதுமக்கள்தான் அதனை உணர்ந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிடின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.