உள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.
அந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.
யுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.
இவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.
கிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.