மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை ஏற்கமாட்டோம் – சீனா திட்டவட்டம்

பாகிஸ்தானிலிருந்து செயற்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்க முடிவுக்கு சீனா செவிசாய்க்க மறுத்துள்ளது.
குறித்த முடிவை தாங்கள் எதிர்ப்பதாக சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ கூறும்போது, “சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. இது தொடர்பாக கூட்டு ஒப்புதல் மூலமே முடிவு எட்டப்பட வேண்டும். பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதல் மட்டுமே இதற்கு தீர்வாக முடியும். 1267 கமிட்டிதான் இதை முடிவு செய்யவேண்டும், இந்த கமிட்டியைத் தாண்டிப் போய் முடிவெடுக்க முடியாது.
ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகள் ஒரு முடிவை ஐ.நா. பாதுகாப்பு சபை மீது திணிக்கப் பார்க்கின்றன. இதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்” என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த முடிவு மீது இந்தியா ஏமாற்றம் தெரிவிக்க, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவின் மீது விமர்சனக் குரல்களை எழுப்பியுள்ளன.
கடந்த மாதம் அமெரிக்க அமைச்சர் மைக் போம்பியோ கூறும்போது, “சுமார் 10 இலட்சம் முஸ்லிம் மக்களை தங்கள் நாட்டில் அடக்கியாளும் சீனா, ஐ.நா.வின் தடையிலிருந்து ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைக் காக்கிறது” என்று சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.