மட்டக்களப்பு தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு – கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா தலைமையில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப ரீதியான வாழ்க்கை முறையினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை நோக்கியதான முன்நகர்வினை மேற்கொள்ளும் வகையில் இந்த தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப துறையில் மாணவர்களை ஈடுபடுத்தவும் தொழில்நுட்ப துறையில் கற்கும் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் தொழில்நுட்ப துறையில் உள்ள தொழில் ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்யும் வகையிலான நடவடிக்கைகளை இந்த சம்மேளனம் மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வியை பூர்த்திசெய்த 7 இளைஞர் யுவதிகளுக்கு கல்முனை சகானா நிறுவத்தினால் தொழிலுக்கான நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் என்.குணநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.