மட்டக்களப்பை வதைக்கும் டெங்கு நோய்!

இலங்கையில் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காரணப்படுகின்றன. டெங்கு அதிகளவில் காணப்படுகின்றன. அதனை தவிர அம்மை நோய் மற்றும் தொழுநோய் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் நிலையுள்ளது. அவற்றிக்கான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
டெங்கு தொடர்பில் இலங்கை முழுவதிலும் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தினை கொழும்பு உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்று வரையில் 1985பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1260பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மண்முனை வடக்கு பிரதேசத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 248பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் மண்முனை வடக்கு பிரதேசத்தில் எந்த மரணச்சம்பவங்களும் இடம்பெறவில்லை.
டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதியியில் நுளம்பு பெருக்கமான பகுதிகளில் அழிக்கப்பட்டன. அப்பகுதியில் புகையிடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரையில் ஆறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 38பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு 14பேர் இனங்காணப்பட்டுள்ளனர்” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.