மத்தியூஸ் இரட்டைச் சதம் – 515 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

ஹராரேயில் நடைபெற்று வரும் சிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்டில் மத்தியூஸ் இரட்டை சதம் அடிக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 515 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.
முதல் மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மஸ்வாயுர் 55 ஓட்டங்களையும், கசுஜா 63 ஓட்டங்களையும், எர்வின் 85 ஓட்டங்களையும் சேர்த்தனர். இறுதியில் சிம்பாப்வே 148 ஓவர்கள் விளையாடி 358 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்தெனிய ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணியில், அரைசதம் அடித்த தனஞ்சய டி சில்வா 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டிக்வெலவும் 63 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் மத்தியூஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 515 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது. மத்தியூஸ் 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடந்த ஐந்து வருடத்தில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்ற இரட்டைச் சதம் இதுவாகும். இலங்கை அணியில் இறுதியாக சங்கக்காரா மற்றும் மஹேல ஆகியோரே இரட்டைச் சதத்தைப் பெற்றுள்ளனர்.
பின்னர் 157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் சிம்பாப்வே 2-வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இப்போட்டியின் இறுதி நாள் இன்றாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.