மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் : போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டம்!
In இந்தியா December 10, 2020 3:09 am GMT 0 Comments 1391 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்கள் தொடர்பான வரைவு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 13 விவசாய சங்கங்களிடம் மத்திய வேளாண் துறை இணைச் செயலர் விவேக் அகர்வால் நேற்று வழங்கியுள்ளார்.
அந்த அறிக்கையில் ‘விவசாயிகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் திறந்த மனதுடன் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருகிறது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாகப் மத்திய அரசு எதுவும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் “மத்திய அரசின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 14-ஆம் திகதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். ஜெய்ப்பூர்-டெல்லி, டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலைகளை வரும் 12-ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் டெல்லியை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலைகள் படிப்படியாக முடக்கப்படும்” என அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.