மனித செயற்பாடுகளே இயற்கைப் பேரழிவுகளுக்கு காரணம்:சிவப்பிரியா
In இலங்கை December 26, 2018 10:06 am GMT 0 Comments 1395 by : Yuganthini

இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற மனித செயற்பாடுகள்தான் இயற்கைப் பேரழிவுகளுக்கு காரணமென களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவிப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இயற்கை அனர்த்தங்களால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாகும்.
ஆகையால் இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி முற்கூட்டியே அவர்களுக்கான உபாயங்களை அறிவுறுத்தி, பாதுகாப்பு வழங்குவது, பிரதேச செயலகத்திலுள்ள ஒவ்வாரு உத்தியோகஸ்த்தர்களதும் சமுதாயம் சார் கடப்பாடாகும்.
அந்தவகையில், பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகஸ்த்தர்களும், குறிப்பாக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், கிராமங்களிலே ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது, முகம்கொடுப்பது போன்ற விடயங்களுக்கு மிகவும் காத்திரமானவர்களாக இருக்கின்றார்கள்.
இவற்றுக்கு மேலாக அனர்த்தமொன்று நிகழும்போது அனைத்து உத்தியோகஸ்த்தர்களும் ஒன்றிணைந்து பிரதேச மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பாகும்.
மேலும் நாம் அனைவரும் இயற்கையைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம். மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காது பாதுகாப்பது, உட்கட்டுமானங்களை இயற்கைக்கு ஏற்ற வகையில் அமைப்பது, பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வது, போன்றவற்றில் அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டியது அவசியமாகும்” என சிவிப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.