மன்னாரில் கனிய வள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
In இலங்கை December 28, 2020 8:09 am GMT 0 Comments 1348 by : Yuganthini
மன்னாரில் அவுஸ்ரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனமொன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை முடித்து, தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த கனிய வள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்பும் இணைந்து மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் குறித்த கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த கண்டன போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம், கடலில் தாழும் மன்னார் தீவை பாதுகாப்போம், வெள்ளம் வரும் முன்னர் அணைகட்டுவோம் உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கணிய வள மண் அகழ்விற்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த கண்டன போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.