மன்னாரில் கிராம மட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
In இலங்கை January 18, 2020 9:24 am GMT 0 Comments 1556 by : Varothayan
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாவட்ட ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அபிவிருத்தி முன்னேடுப்புக்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கும் ஒன்றுகூடல் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.
மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்புக்கு நேசக்கரம் பிரஜைகள் குழுவின் தலைவர் பி.எஸ்.அன்ரன் தலைமை தாங்கினார்.
குறித்த ஒன்றுகூடலில் கிராம ரீதியாக இயங்கி வரும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் நேசக்கரம் பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் ஊடாக 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்ற கிராம, பிரதேச மட்ட செயற்பாடுகள், உள்ளக அபிவிருத்தி சமூக சேவை செயற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் கிராம மட்டத்தில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்படவுள்ள பொது கலந்துரையாடல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், பள்ளிமுனை பகுதிகளை சேர்ந்த பெண்கள், நேசகரம் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் மற்றும் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரி மேரி பிரியந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.