மன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா!- பலர் சுயதனிமைப்படுத்தலில்
In ஆசிரியர் தெரிவு November 30, 2020 7:50 am GMT 0 Comments 1520 by : Yuganthini
மன்னார் மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் டி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின்போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் 3பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார்புரத்தில் மீன்வாடி அமைத்து, கடற் தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள்.
இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்தில் இருந்து வருகை தந்து வரையாறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும், சமூகத்திற்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களில் 6 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுடன் தொடர்பாக இருந்த அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்களாக 18 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நான்காவது தொற்று உடையவர் இரணை இலுப்பைக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 21 ஆம் திகதி, கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு பேருந்து ஊடாக வருகை தந்து, வவுனியாவில் இருந்து முச்சக்கர வண்டியூடாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
இவரும் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவருடன் தொடர்பில் இருந்த 5 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 1286 பி.சி.ஆர்.பரிசோதனைகள், மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு குறித்த 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரையில், மன்னார் மாவட்டத்தில் 3ஆயிரத்து 423 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் இருவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஏனைய 13 பேரும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
தற்போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 4 பேரும் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட.மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இவர்கள் சிகிச்சை முடிவடைந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதியளவில் வீடுகளுக்கு திரும்புவார்கள்.
மீனவ சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீன்களை சமைக்கும்போது சுடு நீரில் கழுவி, மீனை உபயோகித்த கைகளை தொற்று நீக்கிகள் மூலம் கழுவுவதன் ஊடாக மீன்களினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றுக்களை நாங்கள் தவிர்த்துக் கொள்ள முடியும்.
மீன்களை உண்ணக்கூடாது என நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.