மன்னாரில் விலங்குகளை வேட்டையாட அமைத்த மின்சார இணைப்பில் சிக்கி இரண்டு குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு
In இலங்கை January 29, 2021 8:22 am GMT 0 Comments 1552 by : Yuganthini
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பிரதான வீதிற்கு சற்று தொலைவில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பிரதான வீதிக்கு அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று, வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைத்திருந்த மின் இணைப்பில் சிக்கியே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று காலை குறித்த இருவரும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள், மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து மின் இணைப்பை துண்டித்ததன் பின்னரே சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.