மன்னார் மாவட்டத்தில் புதிய பிரதேசச் செயலகம் உருவாக்குவது குறித்து விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவொன்றை அமைப்பது குறித்து முயற்சிக்ள முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதுகுறித்த தீர்மானத்தின் முன்மொழிவை தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பிவைக்கும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவை அமைப்பது என்ற தீர்மானத்தின் முன்மொழிவு பெற்றுக்கொள்ளப்பட்டு தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.