மன்னார் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2ஆவது நாளகவும் தொடர்கிறது
In இலங்கை September 7, 2018 8:39 am GMT 0 Comments 1853 by : Yuganthini
மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது நேற்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று ஆரம்பித்த குறித்த பணிப்புறக்கணிப்பினை 2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில், கர்ப்பிணி தாய் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். இருப்பினும் குழந்தை இறந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்ட தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும் சம்பவத்தை அறிந்தவுடன், பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியையும் பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவத்தை அறிந்த பொலிஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று காலை 8 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான வைத்திய அதிகாரி மற்றும் மகப்போற்று வைத்திய நிபுணர் ஆகியோர், குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லையென எழுத்து மூலமாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளனர்.
அந்தவகையில் இன்றும் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை தொடர்ந்துள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர்கள், வைத்திய நிபுனர்கள் கலந்து கொண்டதோடு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தமது தாய் சங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தாங்கள் குறித்த பணிப்பகிஸ்கரிப்பை தொடர்வதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பை சுமூகமான நிலமைக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தையை தாம் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகள் ஆகியோர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
எனினும் வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுருத்தல்கள் இருப்பதாகவும், இது தொடர்பான சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.