மயிலத்தமடு- மாதவனை விவகாரம்: நீதிமன்றத்தை நாடுவதாக எச்சரிக்கும் சுமந்திரன்
In இலங்கை December 14, 2020 7:58 am GMT 0 Comments 1417 by : Yuganthini
மட்டக்களப்பு- மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கூட்டமைப்பினர், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த பண்ணையாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
குறித்த பண்ணையில் இருந்து கொடுக்கப்படுகின்ற பால், அரசாங்க நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனால், தற்போது இவற்றை அழிக்கும் வண்ணமாக அரசாங்கம் தற்போது செயற்படுகின்றது.
மயிலத்தமடு, மாதவனை பகுதியிலுள்ள நிலம், மகாவளிக்கு சொந்தம் எனவும் சில நிலம் வனப்பாதுகாப்பு துறையினருக்கு சொந்தமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மகாவளிக்கு தண்ணீர் வராவிட்டாலும் அதனூடாக குடியேற்றத் திட்டங்களை மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகதான், இப்பொழுது சோளப் பயிர்ச் செய்கையாளர்களையும் கொண்டு வந்து இருக்கின்றார்கள் என்பது நன்றாக தெரிகின்றது.
ஆகவே பல காலங்களாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட இந்த பிரதேசத்தை அரசாங்கம் அபகரித்து, வேறு மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அதனுடன் தொடர்பான அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தினோம்.
ஆனால், எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. ஆகவே நீதிமன்றத்தை நாடவுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.