மருதனார்மடம் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் ஆறு பேருக்கு தொற்று!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 100 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் அறிக்கை இன்று மாலை வெளியாகியுள்ளது.
இதன்படி, தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழில் இன்றுமட்டும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மருதனார்மடம் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாழில் பரிசோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.