மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல மற்றுமொரு தலைவர், தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகுவாரா இல்லையா என்பதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல தலைவர்கள் உருவாகுவதற்குக் காரணமாகவிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர போன்ற அரசியல் தலைவர்கள் இதனைத் தீர்மானிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வல்வெட்டித் துறையில், உலக சாதனை நீச்சல் வீரன் ஆழிக்குமரனின் நினைவாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், “இந்த நாட்டிலே நாட்டுத் தலைவர்களை உருவாக்குகின்ற பெருமையைக் கொண்டவர் அமைச்சர் மங்கள சமரவீர.
இந்நிலையில், நாட்டிற்கான இன்னொரு தலைவரைத் தேர்ந்தெடுக்கின்ற போட்டி அண்மித்திருக்கின்ற இவ்வேளையிலே அவருடைய பங்களிப்பு இப்போது முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இந்த வல்வெட்டித்துறை மண்ணிலே தோன்றிய இரண்டு உலக சாதனையாளர்கள் பற்றி கூறினேன். ஒருவருக்காக இன்று இந்த மண்ணில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்றவரைப் போன்ற இன்னொருவர் எங்கள் மத்தியிலே இருந்து எழுவாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது தெற்கில் உள்ள அரசியல்வாதிகளாகிய நீங்களே.
உங்களுடைய அரசியலும் நீங்கள் உருவாக்குகின்ற அரச தலைவர்களும் தான் அப்படியான ஒன்று இனி நடக்குமா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.
ஆகையாலே நிதானமாக செயற்பட்டு, நாம் பழைய நினைவுகளோடு மட்டும் இருந்து தொடர்ந்து எதிர்காலத்திலே பயணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்று அவர் சூசகமாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.