மலேசியா, பிளாஸ்ரிக் கழிவுகளை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பியது
In இங்கிலாந்து January 20, 2020 11:24 am GMT 0 Comments 2292 by : shiyani

கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது.
மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல என நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனாலும் மலேசியாவும் ஏனைய நாடுகளும் இதற்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மேலும் 110 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின் தெரிவித்தார்.
150 கொள்கலன்களில் 43 பிரான்ஸ், 42 பிரித்தானியா, 17 அமெரிக்கா, 11 கனடா, 10 ஸ்பெயின் மற்றும் மீதமுள்ளவை ஹொங்ஹொங், ஜப்பான், சிங்கப்பூர், போர்ச்சுகல், சீனா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக மலேசியா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மேலும் 60 கொள்கலன்களை திரும்பப் பெற அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மலேசிய துறைமுகங்களில் வைக்கப்பட்டுள்ள 110 பிளாஸ்ரிக் கொள்கலன்களில் கனடா 15 , ஜப்பான் 14, இங்கிலாந்து 9, மற்றும் பெல்ஜியம் 8 கொள்கலன்கள் உள்ளதாகவும் யியோ பீ யின் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பிளாஸ்ரிக் இறக்குமதி தொடர்பான செயற்திட்டத்தை அடுத்த மாதம் அரசாங்கம் தொடங்கும் என கூறியுள்ள யியோ பீ யின், எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.