சடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)
In ஆசிரியர் தெரிவு April 18, 2019 11:18 am GMT 0 Comments 5554 by : Dhackshala
மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை பொதுமயானத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை அவர்களது சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்திருந்தனர்.
இவர்களின் சடலங்கள் இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கம், டச்பார், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.
அதன்பின்னர் சடலங்கள் மட்டக்களப்பு புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி வழிபாடுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அஞ்சலி வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியதுடன் வழிபாடுகளைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆறு பேரின் சடலங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
டச்பார் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.
இதன்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தியதுடன் பல்வேறு இடங்களிலும் நினைவு பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹியங்கனை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு – கண்ணீரில் மட்டக்களப்பு!
மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சடலங்கள் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.
உயிரிழந்த பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்னஉப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 10பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10 பேரே உயிரிழந்திருந்தனர்.
தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருந்தது.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.