மாகாண சபை தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் – வே.இராதாகிருஸ்ணன்
மாகாண சபை தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜராமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு திட்டம்’ எனும் தொனிப்பொருளில் சுய தொழில் செய்பவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘இந்தியா இலங்கையுடன் 1987 ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்திற்கு அமைவாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
இந்த மாகாண சபை உருவாக்கப்பட்டதனால் தான் இன்று நுவரெலியா மாவட்டத்தில் 17 உறுப்பினர்கள் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதில் கிட்டதட்ட 12 உறுப்பினர்கள் தமிழ் உறுப்பினர்கள் வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
மத்திய மாகாண சபையின் காலம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் வடக்கு, வடமேல் ஆகிய மாகாண சபைகளின் காலமும் முடிவடையவுள்ளது.
மலையக மக்களின் கோரிக்கைக்கு அமைய பழைய முறைப்படியே தேர்தலை நடத்தப்பட வேண்டும். பிரதேச சபைகளின் தேர்தல் முறைமை புதிய முறையில் நடந்ததனால் நாம் அதிகளவில் பாதிக்கப்பட்டோம். இதனால் உருப்படியான சபையை அமைக்க முடியவில்லை.
பணம் இருந்தால் சபையை அமைக்கும் நிலையே காணப்பட்டன. அங்கத்தவரை விலைக்கு வாங்கலாம், அரசாங்கத்தின் நோக்கம் காசு அதிமாக செலவு செய்யக்கூடாது.
மக்களுக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கக்கூடாது. நேர்மையான முறையில் போக வேண்டும் என்பது தான். நடந்து முடிந்த உள்ளுராட்சியில் இதற்கு மாறாக நடைபெற்றது. எனவே மாகாண சபை தேர்தல் பழைய முறையிலேயே நடத்தபட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.