மாணவர்கள் கைதானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் – அனந்தி
In ஆசிரியர் தெரிவு May 4, 2019 9:22 am GMT 0 Comments 2690 by : Litharsan
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடக்கப்படுவதென்பது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகவே அமைவதாக ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் தங்களது பிழைகளை மூடிமறைப்பதற்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீது கவனத்தை திருப்பும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மற்றும் தியாகி திலீபனின் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இதுகுறித்து அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் ஆன நிலையில், எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையே காணப்படுகின்றது.
ஆனால் இப்போது கொழும்பிலும் கிழக்கிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்காக அவசரகால சட்டத்தைக் கொண்டுவந்து இப்போது யாழ். பல்கலைக் கழக மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
அத்துடன், ஒரு நீதிக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை கொண்ட வரலாற்றை எமது சந்ததிக்கு எடுத்துக்காட்டுவது முக்கியமானதென்பதுடன் அதனைத் தடுக்கும் நோக்கமானது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த செயற்பாடானது முற்றுமுழுதாகவே எமது உரிமைக்கான குரலை நசுக்கும் செயற்பாடாகவே கருத முடிகிறது.
எனவே பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடக்கப்படுவதென்பது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகவே அமைகின்றது” என அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.