மின்சாரம், நீர் கட்டணங்களும் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஒன்றிணைந்த எதிரணி
எரிபொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களின் விலைகளும் வெகுவிரைவிலேயே அதிகரிக்கப்படவுள்ளதென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) பொரளை, என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயமானது அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கம் என்றே அனைவரும் நினைத்தார்கள்.
ஏனெனில், அந்தளவுக்கு மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியின் தாக்கத்தை இன்று அனைவரும் அனுபவித்து வருகிறார்கள். இதனால், ஏற்பட்ட வாழ்க்கைச்செலவை ஈடுசெய்ய இந்த அரசாங்கத்துக்கும் இதுவரை முடியாமலுள்ளது.
ஆனால், மத்திய வங்கிப் பிணை முறி மோசடியின் பிரதான குற்றவாளியாக அர்ஜுன மகேந்திரனை இந்த அரசாங்கம் ஒருபோதும் நாட்டுக்குக் கொண்டுவராது. அவரை நாட்டுக்கு கொண்டுவந்தால் பிரதமரும் சிக்கிக் கொள்வார் என்பதால் அரசாங்கம் ஒருபோதும் அதனை மேற்கொள்ளாது.
அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் இல்லாது போயுள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
பாதாளக்குழுக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கொலைகள், போதைப்பொருள் வியாபாரமும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பாதாளக்குழுக்களின் பேச்சாளர் போல் செயற்பட்டு வருகிறார்.
பாதாளக்குழுக்களினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலே அவர் கருத்து வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் ஈடுபடும் இந்த அரசாங்கமானது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில், பொருட்களின் விலைகளை அதிகரிக்கவும் தவறுவதில்லை. எரிபொருட்களின் விலை ஏற்றமே மக்களுக்கு பாரிய கஸ்டமாக இருக்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் இடம்பெறும் இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் மக்களே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.