மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா!
மியன்மார் ஜனாதிபதி ஹிதின் கியாவ் (Htin Kyaw) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
அவரது பதவி விலகலுக்கான உரிய காரணங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. எனினும், உடல்நிலை பாதிப்பு காரணமாக அவரது உத்தியோகப்பூர்வ செயற்பாடுகளும் அண்மைக் காலமாக பலவீனமடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மியன்மாரில் பல தசாப்தங்களாக நிலவிய இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒரு திருப்புமுனையாக கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஹிதின் கியாவ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் ஏழு வேலை நாட்களுக்குள் நாட்டின் புதிய தலைமை தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிதின் கியாவ் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக கடந்த ஓராண்டு காலமாக வதந்திகள் கிளம்பியிருந்த நிலையில், அரசாங்கமும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் அதிகாரிகளும் அதனை தொடர்ந்து மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.