மியன்மார் தொடர்பான வழக்குக் கோப்புகளை தயாரிப்பதற்கு ஐ.நா. குழு நியமனம்!
மியன்மாரில் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பிற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வழக்குக் கோப்புகளை தயாரிக்கும் முகமாக குழுவொன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகம் ஆதரவாக வாக்களித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 47 உறுப்பினர்களை கொண்ட சபையில் 35 உறுப்பினர்கள் சார்பாக வாக்களித்துள்ளனர். சீனா, பிலிப்பீன்ஸ் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகளின் அங்கத்தவர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகளின் உண்மை கண்டறியும் குறிக்கோளின் (FFM) அடிப்படையில் அமைத்துள்ள நிலையில், அதனை மியன்மார் அரசாங்கம் நிராகரிப்பதாக மியான்மர் தூதுவர் கியாவ் மொய் டன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அது சமநிலையற்ற ஒருதலைப்பட்சமான தீரிமானம் என்றும் நாட்டில் ஒற்றுமையின்மையை தோற்றுவிக்க மேற்கொள்ளும் முயற்சி என்றும் குற்றம்சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தின் ஊடாக, மியன்மாரில் கடந்த 2011 ல் இருந்து இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல், ஆய்வு செய்தல், நியாயமான மற்றும் சுயாதீனமான குற்றவியல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், துரிதமாக கோப்புகளை தயார் செய்தல் போன்ற பணிகளுக்கான குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.