தாக்குதல்களை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ரிஷாட்
In இலங்கை April 22, 2019 11:34 am GMT 0 Comments 2307 by : adminsrilanka

நாட்டில் வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தியவர்களை பாரபட்சமுமின்றி தண்டிக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன், இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு உட்பட பல பகுதிகளில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதேவேளை இந்த குண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தை தெரிவிக்கின்றேன். குறித்த சம்பவத்தை செய்தவர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அந்தவகையில் மிலேச்சத்தனமான சம்பவங்களின் பின்னணி தொடர்பில், கண்டறிந்து இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை இனம் கண்டு அவற்றை துடைத்தெறிந்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மேலும், இத்தகைய பயங்கரவாத செயற்பாடுகளால் இதனை மேற்கொண்டவர்கள் என்ன இலாபத்தை அடையப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற மனிதநேயமற்ற தாக்குதல்களை ஒரு போதும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
அதேபோன்று நாட்டின் இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும எந்த சக்திகளுக்கும் மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் விலைபோகக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.