மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே விக்கி தனிக்கட்சியை ஆரம்பித்துள்ளார் – மஹிந்த அணி
மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே, வடமாகான முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக்கட்சியை ஆரம்பித்துள்ளதாக, மஹிந்த அணி குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மக்ளிடையே கூட்டமைப்பு நன்மதிப்பை இழந்துள்ளதால், தனித்து போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்றும் மீண்டும் கூட்டமைப்புடன் இணையும் திட்டம் சி.வியிடம் இருப்பதாக, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், திலும் அமுனுகம (Dilum Amunugama) தமது குடும்பத்தார் சகிதம் கலந்து கொண்டிருந்தார்.
சமய நிகழ்வுகளை அடுத்து வெளியில் வந்த அவரிடம், வடக்கில் சி.வி.விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”கடந்த நான்கு வருடகாலமாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமக்கு எதனையும் செய்யவில்லை என்ற கவலை தமிழ் மக்களுக்கு இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஸவின் கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றன, அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் வாழ்க்கையைக் கொண்டுச் செல்வதற்கு வருமானம் கிடைத்தது.
இவை அனைத்தும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க தமிழத் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளது.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நன்மதிப்பையும் இழந்துள்ளது. இதனால் மக்களின் குழப்பத்தைப் பயன்படுத்தி சுயாதீனமாக களமிறங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று, மீண்டும் கூட்டமைப்புடன் கைக்கோர்த்து, வடக்கின் அதிகாரத்தைப் பெறும் சுழ்ச்சியாகவே நான் அதனைப் பார்க்கிறேன்.
இதுவரைக்காலமும் இந்த மாதிரியான அரசியல் செயற்பாடுகள் தெற்கில் மாத்திரமே நடைபெற்றது. இப்பொழுது மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் வடக்கிலும் ஆரம்பமாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.