மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா
In இலங்கை October 21, 2018 5:00 pm GMT 0 Comments 1439 by : Ravivarman
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்போம் எனக் கூறி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கு சூழ்ச்சியில் மஹிந்த தரப்பினர் ஈடுபடுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினையையும், மக்களின் குழப்பத்தினையும் பயன்படுத்தி அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுக்க, தங்கள் வாரிசுகளை அரசணையில் ஏற்ற அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அத்துடன் தனக்கு விசுவாசமான அணியைக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வழியைத் தேடவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களின் பொய்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள்.
கடந்த காலங்களில் இடைக்கால அரசாங்கம் குறித்து பேசப்பட்டது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அதில் வெற்றி பெறமுடியாமல் அரசாங்கத்திலிருந்து விலகிய ஒரு கூட்டமும் இருக்கிறது.
அவர்களுக்கும் அடுத்து என்ன செய்வதென்ற பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு மஹிந்தவிடமோ, மைத்திரியிடமோ நல்ல மதிப்பு இல்லை. எனவே இருவரையும் இணைத்து அதன் மூலம் தங்கள் அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் மக்களின் பிரச்சினையை கருத்திற் கொள்ளாது, பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக மாற்ற முற்படுகிறார்கள்.
இவ்வாறு சுயநலநோக்கத்தோடு செயற்படுபவர்கள் குறித்தும், அவர்களின் சூழ்ச்சி குறித்தும் மக்கள் அவதானமாகவே செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.