மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராகுலே பொறுப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராகுல்காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம், நீண்டகாலம் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய ஒற்றுமை ஆகியவற்றை காக்கும் தேர்தலாகும்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மூன்று மதங்களைத் தவிர மற்ற மதங்கள் இஸ்லாம், பார்சியம் மற்றும் ஜெயின் ஆகியவற்றை ஊடுருவல்காரர்கள் என்று கூறுகிறார். அவர்கள் 30 கோடி அளவுக்கு இருக்கிறார்கள்.
பாஜக அந்த மக்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது. அவர்களை கொலை செய்யப்போகிறதா அல்லது பசிபிக் கடலில் தூக்கிவீசப்போகிறார்களா. நாட்டுக்குள் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் திட்டம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் சண்டை போட வேண்டும் என்பதுதான். பா.ஜ.க.வின் திட்டம் பாகிஸ்தானின் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் இருக்கிறது.
மோடியும், அமித் ஷாவும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இதற்காக எந்த கூட்டணியையும் நாங்கள் ஆதரிப்போம். இந்த தேர்தல் தேசத்தை, அரசமைப்பை பாதுகாக்கும் தேர்தல். முதலில் இந்தியர்களாக இருப்போம் அதன்பின்தான் இந்து மற்றும் முஸ்லிம் என்பதெல்லாம்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம். டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெல்லும் நிலையில் இருந்தால், 7 இடங்களையும்கூட விட்டுத்தர தயாராக இருந்தோம். ஆனால், காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாது.
காங்கிரஸ் கட்சிக்கு எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. கடந்த 2 மாதங்களாக நாங்கள் கூட்டணி அமைக்க முயற்சித்தோம். மிகுந்த வருத்தத்துடன் இதை கூறுகிறேன், மோடியும், அமித் ஷாவும் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், அதற்கு ராகுல்காந்தி தான் பொறுப்பு.
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி, கோவா, சண்டிகர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் பலவீனமாக்கிவிட்டது. இது நல்ல விஷயம் அல்ல.நாங்கள் பா.ஜ.க.வுக்கு கடும் போட்டி அளிப்போம், டெல்லியில் பா.ஜ.க.வை தோற்கடிப்போம்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.