இந்தியாவுடன் முரண்பட முடியாது: விஜயமுனி சொய்சா
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மிக நீண்டகால சிறந்த உறவு காணப்படுகின்ற நிலையில், மீனவப் பிரச்சினையினால் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த கலந்துரையாடலின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினர் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு மகஜரொன்றை கையளித்ததுடன், தமது தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.
கடற்றொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை செவிமடுத்த பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர், ”மீனவ சமூகத்தினர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தீர்த்து வைக்க முடியாது. யாழ். மாவட்டத்தை முதலாவதாக தெரிவுசெய்து பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் 5 துறைமுகங்கள், 20 இடங்களில் இறங்குதுறைகள் அமைத்தல், போன்ற அபிவிருத்திகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக இந்த வருடத்தில் 17 இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம். 87 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆனால், வரலாற்று ரீதியாக எம்முடன் பல தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு அயல்நாடாக இந்தியா விளங்குகின்றமையால், எமது உறவில் விரிசலை ஏற்படுத்த முடியாது.
எனவே, இந்திய அரசாங்கத்துடனும், இந்த மீனவ அமைப்புக்களுடனும் சுமூகமான பேச்சுக்களை நடத்தி, அதன்மூலம் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம். ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமென்பதே எமது நோக்கம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.