மீன்களில் நச்சு வேதிப்பொருள் உள்ளதா? – தொடரும் ஆய்வு!

மீன்கள் பழுதடையாமல் இருப்பதற்கு நச்சு வேதிபொருள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
மனிதன் இறந்ததும் உடல் பழுதடையாமல் வைத்திருக்க பயன்படுத்தப்படும் போர்மிலா நச்சமிலத்தை, சென்னையில் விற்பனையாகும் மீன்களுக்கு பயன்படுத்துவதாக ஊடகமொன்று முன்னெடுத்த ஆய்வின் தகவல்கள் தெரிவித்திருந்தன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த போதே, ஜெயக்குமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீன்களுக்கு நச்சு வேதிப்பொருள் கலக்கப்படுகின்றதா என்ற உண்மையை கண்டறிய, தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகளை நியமித்தது. அதனடிப்படையில், சென்னையிலுள்ள மீன் சந்தைகளுக்கு சென்ற அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆய்வுகளில் முதற்கட்டமாக, விற்பனையாகும் மீன்கள் எத்தனை நாட்கள் கொண்டவை மற்றும் விநியோகஸ்தர்களின் விற்பனை முறை தொடர்பில் கேட்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் ஐந்து மீன்களை வாங்கி அவற்றை ஆய்வுக்குட்படுத்தினர்.
குறித்த ஆய்வுகளின் பிரகாரம், இதுவரை எந்த மீன்களிலும் போர்மிலா அமிலம் கலக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகமொன்று நுகர்வோரிடம் வினவிய போது, சிலர் தாம் வாங்கும் மீன்கள் சுத்தமாகவே காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இன்னும் சிலர் வாங்குகின்ற மீன்கள் துர்நாற்றம் நிறைந்ததாக காணப்படுவதாகவும், மீன்களில் ஏதோ கலக்கப்படுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
“மீன்களில் நச்சமிலம் கலக்கப்படுவதாக கூறுவது வதந்தியாகும். உண்மையில் எமது அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த ஆய்வுகள் எதுவும் மீன்களில் நச்சு கலந்ததாக உறுதிப்படுத்தவில்லை. எனினும் மக்களின் அச்சத்தை போக்க தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
சென்னையில் விற்பனையாகும் மீன்களில் நச்சுப்பொருள் கலக்கப்படுகிறது என்ற செய்திகள், அண்மைக்காலமாக காணொளிகள் மூலம் பரப்பப்பட்டு வருவதோடு, இதனால் அரசாங்கம் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.