முக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்

பிரான்ஸில் நடைமுறையிலுள்ள முக்காடு அணிவதற்கு எதிரான தடை மனிதஉரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்குழு தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு பொதுஇடங்களில் முகத்தை முழுதாக மறைக்கும் முக்காடு அணிவதற்கு எதிரான சட்டத்தை பிரான்ஸ் அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததிலிருந்து பல சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இத்தடையின்கீழ் பொதுஇடங்களில் முழு முகத்தையும் மறைக்கும் வகையில் முக்காடு அணிபவர்கள் 150 யூரோ தண்டம் விதிக்கப்படுவதுடன் பிரஞ்சு குடியுரிமை தொடர்பான பாடங்களை கற்பதற்கும் பணிக்கப்படுகிறார்கள்.
இந்தத்தடை பெண்களின் நம்பிக்கைகளுக்கு அநீதிவிளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர்கள் வீட்டிலேயே கட்டுப்படுத்தப்படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் வழிவகுக்குமெனவும் மனித உரிமைகள்குழு எச்சரித்துள்ளது.
மேலும் இத்தடை பெண்களின் மனிதஉரிமைகளுக்கு எதிரானமீறல் எனவும் பிரான்ஸ், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் சமூககாரணங்களுக்காக இத்தடை மிக அவசியம் எனும் பிரான்ஸின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று மனித உரிமைகள்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் பலநாடுகள் இஸ்லாமிய ஆடை தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. டென்மார்க் நாடாளுமன்றம் மே மாதத்தில் பொதுஇடங்களில் முக்காடு அணிவதற்கு தடை விதித்தது.
பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளும் பொதுஇடங்களில் முகத்தை முழுதாக மறைக்கும் முக்காடு அணிவதற்கு சிலதடைகளை நடைமுறையில் கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சிலேயே மிகப்பெரிய முஸ்லீம் சமூகம் காணப்படுகிறது. பிரான்சின் 67 மில்லியன் மக்களில் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் முஸ்லீம் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.