முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன
In இலங்கை January 21, 2019 3:50 pm GMT 0 Comments 1270 by : Ravivarman

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக புதியதொரு அதிகாரசபையினை நிறுவ உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
றாகமை நகரை முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கும் நிகழ்வில் இன்று (திங்கட்கிழமை) கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு என்பது அத்துறையைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டு சட்டங்களை இயற்றுவதல்ல. முச்சக்கர வண்டி தொடர்பான கட்டுப்பாடானது முச்சக்கர வண்டி சங்கத்தினால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.
இத்துறையை மென்மேலும் முன்நோக்கி நகர்த்துவதற்கு இத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதென நான் நம்புகின்றேன். விசேடமாக முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். எம்மிடமுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளை நாம் ஒரு போதும் மரியாதையுடன் அழைத்ததில்லை.
அவரை நாம் டிரைவர் அல்லது சாரதி என்றே அழைக்கின்றோம். ஒரு சில முச்சக்கரவண்டி சாரதிகள் இழைக்கும் தவறினால் அவர்களுக்கு இவ்வாறான நிலை தோன்றியுள்ளது. இத்துறையின் வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு நாம் இத்தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
எனவே வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையினை எதிர்காலத்தில் அதிகாரசபையாக மாற்றுவதற்கு நான் எண்ணியுள்ளேன். இவ்விடயம் தொடர்பிலான சட்டத்திட்டங்கள் பெரும்பாலும் வரையப்பட்டுள்ளன.
இன்னும் சில மாதங்களில் இச்சபையை அதிகாரசபையாக மாற்றியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிறைவு செய்வேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.