முடங்கியது அமெரிக்க அரசு – 8 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு!
அமெரிக்க அரசாங்கத்தின் செலவின மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அரச நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் செலவின மசோதாவிற்கும், ஜனாதிபதி ட்ரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்காரணமாக அமெரிக்க அரச நிர்வாகம் முடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், நிர்வாக முடக்கம் காரணமாக 8 இலட்சம் அரச ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அல்லது அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் அரச ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் நிகழ்ந்துள்ளது.
நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.