முதல்வர் பழனிசாமியின் இரு இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை மற்றும் சேலம் இல்லங்களில் குண்டு வெடிக்கும் எனத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை சைபர் பிரிவு பொரிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் மற்றும் சதித் திட்டம் உள்ளதா என்பது தொடர்பாக அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தின் எடப்பாடியில் உள்ள வீடு மற்றும் முதல்வர் என்கிற முறையில் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டுள்ள வீட்டிலுமே குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
காவல் கட்டுப்பாட்டறை எண் 100இற்கு நேற்று ஒருவர் அழைப்பிகை ஏற்படுத்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை மற்றும் சேலத்தில் உள்ள வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், விரைவில் வெடித்துச் சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், முதல்வரின் சென்னை, சேலம் இல்லங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், எந்தத் தடயங்களும் கிடைக்காத நிலையில், சைபர் குற்றத் தடுப்புப் பொலிஸாரின் உதவியுடன் மிரட்டல் விடுத்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.