முத்தரப்புத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத்துக்கான முத்தரப்புத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஷபிர் ரஹ்மான் 77 ஓட்டங்களையும், முஹமடுல்லா 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், உனத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதொடு சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
167 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கை அடைந்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பில் ரோஹித் ஷர்மா 56 ஓட்டங்களையும், டினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களையும் மற்றும் பான்டே 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் ஹூசைன் 2 விக்கெட்டுகளையும், ஹஷன், இஸ்லாம், ரஹ்மான் மற்றும் ஷர்ஹர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.