முருகன் – நளினியின் போராட்டம் தொடர்கிறது
In இந்தியா February 13, 2019 5:08 am GMT 0 Comments 1280 by : Yuganthini
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி மற்றும் முருகன் ஆகியோர். ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
தமது விடுதலையை வலியுறுத்தியே அவர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ரஜிவ்காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், நளினி உட்பட எழுவரை விடுவிப்பதற்கான தீர்மானத்தை ஆளுனர் எடுக்க முடியுமென இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
ஆனால், இவ்விடயத்தில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
ஆகையால், தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
நளினியின் கணவரான முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் கடந்த 2 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். அவருக்கு ஆதரவாக நளினி கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதமிருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும், தங்களை விடுதலை செய்யுமாறும், உண்மையை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
அவ்வாறு இல்லாவிடின் தம்மை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முருகன், அளுநரை கடிதம் மூலம் கோரினார்.
அதற்கு பதில் கிடைக்காத நிலையிலேயே கடந்த 2 ஆம் திகதி முதல் முருகன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அதற்கமைய இன்று 12 ஆவது நாளாக முருகனின் போராட்டம் தொடரும் அதேவேளை, நளினியின் போராட்டம் 3 ஆவது நாளாக தொடர்கின்றது.
உண்ணா விரதமிருக்கும் நளினியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.