முல்லரின் அறிக்கை: ட்ரம்பின் கருத்திற்கு பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிடுவதைப் போன்று எதுவும் முடிந்துவிடவில்லையென, அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வுக்குழு தலைவர் அடம் ஸ்சிஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டமைக்கான ஆதாரம் இல்லையென சிறப்பு சட்டத்தரணி ரொபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முல்லரின் அறிக்கையின் பிரகாரம், ”எவ்வித தலையீடும் இல்லை. அடிப்படைவாதிகள் மற்றும் தீவிர இடதுசாரி ஜனநாயகவாதிகளுக்கு இந்த அறிக்கை பதிலளித்துள்ளது” என ட்ரம்ப் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அடம் ஸ்சிஃப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் குறிப்பிடுவதைப் போன்று எதுவும் முடிவடைந்துவிடவில்லையென குறிப்பிட்டுள்ள அடம் ஸ்சிஃப், அந்த அறிக்கையில் தெரிந்துகொள்ள நிறைய விடயங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் எந்த விடயங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாக அறியவேண்டியுள்ளதென்றும் கூறியுள்ளார்.
எதையும் செய்துவிட்டு நியாயப்படுத்தலாம் என்று நினைத்துவிடக்கூடாது. அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட முல்லர் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை நேற்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.