முல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி
In இலங்கை July 20, 2018 9:41 am GMT 0 Comments 2054 by : Yuganthini

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை தொடர்பில் ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“முல்லைத்தீவில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக விவசாயச் செய்கைகள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போயுள்ளது. மேலும் விவசாயத்தை வாழ்வாதாரதமாக கொண்டுவாழ்ந்த குடும்பங்கள் பெரும் கஸ்ட்டங்களை எதிர்நோக்கி உள்ளன.
இந்தவகையில் சிறுபோக நெற்செய்கையில் மாவட்டத்திலுள்ள 10 வரையான பெரிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் மூவாயிரத்து 87 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோன்று சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 995 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதற்கு முன்னைய காலங்களில் காணப்பட்ட விவசாய விளைச்சலை இன்று காணமுடியவில்லை.
இதனால் மாகாண விவசாயத் திணைக்களமானது வறட்சிக்காலங்களில் குறைந்தளவு நீரைக் கொண்டு விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய தொழிநுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி, சொட்டுநீர்ப்பாசனம், தூவல் நீர்ப்பாசனம் போன்ற மேட்டு நிலப்பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தவகையில் இரண்டாயிரத்து 105 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நிலப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும், இதில் 300 ஏக்கர் வரையில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த போகத்தில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த போகத்தில் இலங்கையில் தேவையான நிலக்கடலை விதைகளை உற்பத்தி செய்த மாவட்டமாக முல்லைத்தீவு காணப்பட்டது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.