வவுனிக்குளம் விபத்து: நீரில் மூழ்கிய ஒரு சிறுவன் உயிரிழப்பு – தந்தை, மகளைத் தேடும் பணி தொடர்கிறது!

Update 02: முல்லைத்தீவு, வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.
விபத்தின்போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குளத்தில் மூழ்கிக் காணாமல் போயுள்ள தந்தை மற்றும் மூன்று வயது மகளைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.
Update 01: வவுனிக்குளத்திற்குள் வாகனம் வீழ்ந்து விபத்து: இருவர் மீட்பு, இருவர் மாயம்!
முல்லைத்தீவு, வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஒன்று குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்நிலையில், வாகனத்தில் பயணம் செய்த சிறுவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டெடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைவிட, வாகனத்தின் சாரதியான கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன் (37), அவரது மகளாக ரசீந்திரன் சார்ஜனா (3) ஆகியோரை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.