முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக உமாசங்கர் பொறுப்பேற்பு!

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அனுப்பிய கடிதத்திற்கு இணங்க அவர் இன்று (திங்கட்கிழமை) கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
வைத்திய கலாநிதி மு.உமாசங்கர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாகத் துறையில் பட்டமேற்படிப்பு நிர்வாகக் கலாநிதி (M.D. – Medical Administration) கற்கை நெறியைப் பூர்த்திசெய்து தற்போது வெளிநாட்டு மேற்படிப்பை சிங்கப்பூரில் முடித்துக்கொண்டு கடந்த மாதம் மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.
இவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகராகவும் கடமை புரிந்துள்ளார்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பொறுப்பேற்கும் படி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரனால் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்பிரகாரம், வைத்தியகலாநிதி மு.உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.