முள்ளிவாய்க்கால் தூபியைத் தகர்த்தமை படுபாதகச் செயல்- ரிஷாட் கண்டனம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நினைவிட அழிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுத்தத்தால் உயிரிழந்த தமிழ் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்துவந்த நினைவுத் தூபியை இப்போது அவசர அவசரமாகத் தகர்த்து, அதனை முழுமையாக அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம் ஏன் ஏற்பட்டது?
இனவாதிகளையும் கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே தவிர, வேறு எந்தக் காரணமும் இதில் இருக்க முடியாது. இந்த நாட்டிலே சிறுபான்மையினர் மீதான இனவாதம் பெருவீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையின் வெளிப்பாடுகள்தான் உடல்களை எரித்தலும், ஞாபகச் சின்னங்களை தகர்த்தலும் ஆகும்.
இந்த வகையான இனவாத செயற்பாடுகளை மானுட நேயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என வாய்ச்சொல்லில் மட்டும் கூறிக்கொண்டு, சிறுபான்மை மக்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் வஞ்சம் தீர்ப்பதிலேயே இந்த அரசாங்கம், தமது காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றது.
தனக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவே, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை தகர்த்து அழித்ததாக துணைவேந்தர் தெரிவித்திருக்கும் கூற்றின் மூலம் அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உடைமைகளை நொருக்குவதன் மூலமும், உள்ளங்களை உடைப்பதன் மூலமும் இனவாதிகளை உற்சாகப்படுத்தி, நாட்டை மேம்படுத்தலாம் என இவர்கள் எண்ணுகிறார்கள் போலும்.
எனவே, யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த அநாகரிக சம்பவத்தை, வட மாகாணத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் வெகுவாகக் கண்டிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.