முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கு முயற்சி – செல்வராசா கஜேந்திரன்
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 5:58 am GMT 0 Comments 2194 by : Dhackshala
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கும் நோக்கத்துடனேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
மேலும், பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்கள் நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இராணுவத்தினர் செய்யும் அநியாயங்களை பொலிஸார் மூடி மறைத்து அவர்களை பாதுகாக்கின்றனர். அத்தோடு அப்பாவி தமிழ் மக்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை சிறையில் அடைப்பதையே நோக்காக கொண்டுள்ளனர். சமூக விரோதிகளை போன்று தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ். பல்கலைக்கழகத்தினர் கடந்த காலங்களில் சிறப்பாக வழிநடத்தியிருந்தனர். அதனை தடுக்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.