முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு பேரதிர்ச்சியானது- உலகத்தார் உணர வேண்டும்- சீமான் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “முள்ளிவாய்க்கால் நிலத்தில் போர் மௌனிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் வன்மையானக் கண்டனத்திற்குரியது.
போர் முடிந்து, அங்கு அமைதி திரும்பிவிட்டது என்றுரைத்தவர்கள் இத்தகைய அடையாள அழிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அன்றைக்கு யாழ். நூலகம் எரிக்கப்பட்டது, இன்றைக்கு யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள நினைவிடம் அழிக்கப்பட்டிருக்கிறது.
ஒற்றை இலங்கைக்குள் எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.