முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் போராட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மன்னாரில் அமைதியான முறையில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் மரணத்திற்கு இறுதி மரியாதை கொடு, ஜனாதிபதி அவர்களே எங்களது ஜனாசாவை புதைக்க அனுமதி தாருங்கள், ஜனாசாவை பலாத்காரமாக எரிப்பதை நிறுத்து, இனவாத தீ அணையட்டும் இன்றுடன், பிறக்கும் தையோடு தீ வைப்பதை முடித்து விடு, எமது நாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமையை பறிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கு கொடுக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.