கண்டி விவகாரத்தை ஐ.நா.-விற்கு எடுத்துச் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்
In இலங்கை March 17, 2018 7:59 am GMT 0 Comments 1504 by : Yuganthini

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனரீதியான வன்செயல்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கையாண்ட மெத்தனப்போக்கு ஆகியன குறித்து ஐ.நா.வின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ.நா. கூட்டத்தொடரில் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, அவர் இன்று (சனிக்கிழமை) சுவிட்சர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஜெனீவா பிரஸ்தாப கூட்டத்தொடரிலும், சமாந்தரமாக உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக நடைபெறும் அமர்வுகளிலும் பங்குபற்றி முன்வைக்கப்படவுள்ள கருத்துக்கள் தொடர்பாக, அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே குறித்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதஉரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் பற்றியும் உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மேலும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற விடயங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தினதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்பினரதும் அசமந்தப்போக்கு குறித்து ம்மனித உரிமைகள் பேரவையில் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.