மூடப்பட்ட மலர்ச்சாலையில் 11 குழந்தைகளின் சடலங்கள்!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில், மூடப்பட்ட நிலையில் காணப்படும் மலர்ச்சாலையொன்றிலிருந்து 11 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மிச்சிகன் மாநில உரிமம் மற்றும் ஒழுங்குமுறை விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற அநாமதேய கடிதமொன்றை தொடர்ந்து, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சென்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சிதைந்த நிலையில் 9 குழந்தைகளின் சடலங்கள் கார்ட்போர்ட் பெட்டியொன்றில் ஒன்றாக போட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்தன. இரண்டு குழந்தைகளின் சடலங்கள் சவப்பெட்டியில் காணப்பட்டுள்ளன.
போலியாக சீல்வைக்கப்பட்ட நிலையில், குறித்த சடலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன என டெட்ரொய்ட் நகர பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சில குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், குழந்தைகளின் பெற்றோரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மிச்சிகன் மாநில உரிமம் மற்றும் ஒழுங்குமுறை விவகார அதிகாரசபையின் தகவலின் பிரகாரம், குறித்த மலர்ச்சாலை காணப்படும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பதப்படுத்தப்பட்ட மற்றும் சில சிதைந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட மலர்ச்சாலை மீது உரிமம் மற்றும் நிதிமுறைகேடு தொடர்பான பல முறைகேடுகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.