மெக்கெல்லை எத்தியோப்பியப் படைகள் கைப்பற்றி போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு!

எத்தியோப்பியாவில் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரேயின் தலைநகர் மெக்கெல்லை கூட்டாட்சித் துருப்புக்கள் கைப்பற்றி ஒரு மாதகால தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டைக்ரே பிராந்தியத்தை ஆட்சிசெய்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF) போராளிகள் கெரில்லா தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற கருத்தை எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது மறுத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடுதலை முன்னணி ஒரு குற்றம் புரியும் குழு எனவும் அது தற்போது முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் மெக்கல்லைச் சுற்றியுள்ள பல்வேறு முனைகளில் மீண்டும் போராடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, டைக்ரே பிராந்தியத்துடனான தொடர்புகள் பெருமளவில் குறைந்துவிட்டதால், மனிதாபிமான சேவையாளர்கள் ஊடகங்களுக்கான தொடர்பாடல்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உண்மை நிலைவரத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மத்திய அரசு மற்றும் இராணுவத் தரப்பினர் டைக்ரேயன்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், எத்தியோப்பிய மோதலையடுத்து சூடானுக்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் அகதிகள் தஞ்சம் கோரியுள்ளனர்.
இதேவேளை, ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் டைக்ரே பிராந்தியத்தை அணுகி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையும் உதவி நிறுவனங்களும் எத்தியோப்பிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன.
2018இல் அபி ஆட்சியைப் பிடித்து ஜனநாயக சீர்திருத்தங்களைத் தொடங்கும் வரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
இதனிடையே, எத்தியோப்பியாவின் 10 பிராந்தியங்களையும் மையப்படுத்த மத்திய அரசு முயன்றதாகத் தெரிவிக்கப்படுவதுடன் ஊழல் மற்றும் உரிமை மீறல்களைக் காரணங்காட்டி டைக்ரேயன் அதிகாரிகள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
எனினும், அரசாங்கம் இதனை மறுப்பதுடன், கடந்த நவம்பர் தொடக்கத்தில் கூட்டாட்சிப் படைகளைத் தாக்கியதற்காக இந்த நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.