மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோருக்கே மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது எனவும் 19ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது எனவும் குறித்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், தொடக்கம் முதலே தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இதனிடையே மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு அளித்த மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.